பஞ்சாப் அணியை துவம்சம் செய்தது டெல்லி- 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Update: 2022-04-20 16:52 GMT
Image Courtesy : Twitter @DelhiCapitals
மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின.

இந்த போட்டியில்  டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்  பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய அகர்வால் 24 ரன்களிலும் தவான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதை தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் அக்சர் பந்துவீச்சில்  ஆட்டமிழந்தார்.

இதனால் பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறியது. அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜிதேஷ் சர்மா 32 ரன்களில் அக்சர் பந்துவீச்சில் எல்பிடபியூ ஆனார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட பஞ்சாப் அணி 20-வது ஓவரின் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி அணி தரப்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமத் , லலித் யாதவ் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

எளிய இலக்கு என்பதால் முதல் பந்தில் இருந்தே அதிரடியை துவங்கினர் ப்ரித்வி ஷா - டேவிட் வார்னர் ஜோடி.
சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய இருவரும் பவர்பிளே முடிவில் (6 ஓவர்கள் ) 81 ரன்கள் குவித்தனர்.

சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் டெல்லி அணி 10.3 ஓவர்களில் 119 ரன்கள் அடித்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்