பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்!

2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை மயங்க் அகர்வால் வழிநடத்துவார் என அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Update: 2022-02-28 07:18 GMT
புதுடெல்லி,

10 அணிகள் கொண்ட 15-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது. 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். 

இதனால் பஞ்சாப் அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புதிய கேப்டனாக மயங்க் அகர்வாலை தேர்வு செய்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வந்துள்ளன. 

இதுதொடர்பாக அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறுகையில், சமீபத்தில் முடிவடைந்த ஏலத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்த புதிய அணியில் அற்புதமான இளம் திறமைகள் மற்றும் சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். மயங்க் தலைமையில் எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க விரும்புகிறோம். அவர் ஒரு கேப்டனுக்குத் தேவையான அனைத்து பண்புகளையும் கொண்ட வீரர். நான் அவருடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன், மேலும் அவர் இந்த அணியை வெற்றிகரமான வழிநடத்துவார் என்று நம்புகிறேன்,” என்றார்.

இந்த புதிய பொறுப்பு குறித்து பதிலளித்த மயங்க் அகர்வால்,  "2018 ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் கிங்ஸில் இருந்து வருகிறேன், மேலும் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய அணியில் சில அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர், அவர்களுடன் பல திறமையான இளைஞர்கள் வாய்ப்பைப் பெற ஆர்வமாக உள்ளனர்." என்று கூறினார். 

மேலும் செய்திகள்