2-வது டி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

இந்தியா- இலங்கை இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் இன்று நடக்கிறது.

Update: 2022-02-25 21:55 GMT
தரம்சாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தரம்சாலாவில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் இஷான் கிஷனும் (89 ரன்), ஸ்ரேயாஸ் அய்யரும் (57 ரன்) அதிரடி காட்டியதுடன் இந்தியா 199 ரன்களை எட்ட உதவினர். தங்கள் பணியை சிறப்பாக செய்த பவுலர்கள் இலங்கையை 137 ரன்னில் கட்டுப்படுத்தினர். ஆனால் இந்தியாவின் பீல்டிங் தான் மெச்சும்படி இல்லை. ‘நாங்கள் சில எளிதான கேட்ச்சுகளை தவற விட்டோம். எங்களது பீல்டிங் பயிற்சியாளர் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது நாங்கள் மிகச்சிறந்த பீல்டிங் அணியாக இருக்க விரும்புகிறோம்’ என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா குறிப்பிட்டார். இதிலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்வது மட்டுமின்றி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள அந்த வீறுநடையை தொடருவதிலும் இந்திய அணி தீவிர முனைப்புடன் உள்ளது.

மழையால் பாதிக்க வாய்ப்பு

இலங்கை அணியை பொறுத்தவரை சரிவில் இருந்து மீள்வதற்கு முடிந்தவரை கடுமையாக முயற்சிப்பார்கள். ஏற்கனவே கொரோனா பாதிப்பால் ஹசரங்கா ஒதுங்கிய நிலையில் இலங்கைக்கு மேலும் ஒரு பின்னடைவாக தசைப்பிடிப்பால் அவதிப்படும் குசல் மென்டிஸ், தீக்‌ஷனா 20 ஓவர் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக தனஞ்ஜெயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா சேர்க்கப்பட்டுள்ளனர்.

குளிர்ச்சியான பகுதியான தரம்சாலாவில் வேகப்பந்து வீச்சு ஓரளவு எடுபடலாம். ஆட்டத்தின் போது மழை குறுக்கிடவும் அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடியுள்ளது. 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது நினைவு கூரத்தக்கது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: பதும் நிசாங்கா, குணதிலகா, ஜனித் லியானாகே, சாரித் அசலங்கா, தினேஷ் சன்டிமால் அல்லது டிக்வெல்லா, தசுன் ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, ஜெப்ரி வாண்டர்சே, ஜெயவிக்ரமா, லாஹிரு குமாரா.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்