மும்பை டெஸ்ட்: காயம் காரணமாக 2 வீரர்கள் பீல்டிங் செய்யவில்லை - பிசிசிஐ தகவல்

காயம் காரணமாக மயங்க் அகர்வால், சுப்மான் கில் ஆகியோர் இன்று பீல்டிங் செய்யமாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Update: 2021-12-05 10:42 GMT
மும்பை,

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் துவக்க வீரர் மயங்க் அகர்வால் 150 ரன்கள் குவித்து அசத்தினார். 

நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் அள்ளி வரலாற்று சாதனை நிகழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 62  ரன்களில் சுருண்டது.  அடுத்து நியூசிலாந்துக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காத இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள்  எடுத்து இருந்தது. 

3 ஆம் நாள்  ஆட்டம் துவங்கியதில் இருந்தே இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. முதல் இன்னிங்சில் 150 ரன்கள் குவித்த மயங்க் அகர்வால் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் (62 ரன்கள்) அடித்து அசத்தினார். இந்திய அணி 70 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்து இருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.  

540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நியூசிலாந்து அணி தற்போது தனது 2-வது இன்னிங்சில் பேட் செய்து வருகிறது. இந்த நிலையில், பேட்டிங் செய்யும்போது வலது முன்னங்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மயங்க் அகர்வாலும்  நேற்று பீல்டிங் செய்யும்போது வலது நடுவிரலில் ஏற்பட்ட வெட்டு காரணமாக சுப்மான் கில்லும் இன்று பீல்டிங் செய்ய மாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்