பாரா விளையாட்டு போட்டி: 2 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்ற ஷீதல் தேவி
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீதல் தேவி 2 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.;
ஹாங்சோவ்,
மாற்றுத் திறனாளிகளுக்கான 4-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.
வில்வித்தையில் பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஷீதல் தேவி 144-142 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூரின் அலிம் நூர் சாஹிடாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 16 வயதான ஷீதல் தேவி இரண்டு கைகளும் இல்லாதவர் ஆவார். அவர் தனது கால் விரல்களை பயன்படுத்தி இலக்கை நோக்கி அம்பை குறி தவறாமல் எய்து புள்ளிகள் குவித்து அசத்தினார். நடப்பு போட்டி தொடரில் ஷீதல் தேவி பெற்ற 3-வது பதக்கம் இதுவாகும்.
முன்னதாக அவர் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப்பதக்கமும், பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தார். 2-வது தங்கத்தை தனதாக்கியதன் மூலம் ஷீதல் தேவி பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஒன்றில் 2 தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சொந்தமாக்கினார்.
ஆசிய பாரா விளையாட்டில் இந்திய அணி நேற்றைய போட்டிகள் முடிவில் 25 தங்கம், 29 வெள்ளி, 45 வெண்கலத்துடன் மொத்தம் 99 பதக்கங்கள் குவித்து 6-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டிகள் இன்று நிறைவு பெற உள்ளன.