உலக டேபிள் டென்னிஸ்: இந்திய பெண்கள் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி

உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வந்து அடுத்த 3 ஆட்டங்களையும் வசப்படுத்தி 3-2 என்ற கணக்கில் ஸ்பெயினையை வீழ்த்தியது.

Update: 2024-02-20 22:00 GMT

பூசன்,

உலக டேபிள் டென்னிஸ் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் பூசன் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 40 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் 3-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்குள் (ரவுண்ட் 24) அடியெடுத்து வைக்கும்.

இதன் பெண்கள் பிரிவில் 'குரூப் 1'-ல் அங்கம் வகிக்கும் இந்திய அணி நேற்று நடந்த 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொண்டது. இதில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த இந்திய அணி சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து அடுத்த 3 ஆட்டங்களையும் வசப்படுத்தி 3-2 என்ற கணக்கில் ஸ்பெயினையை வீழ்த்தியது.

தொடக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 9-11, 11-9, 11-13, 4-11 என்ற செட் கணக்கில் மரியா ஜியாவிடம் (ஸ்பெயின்) தோற்றார். அடுத்த ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா 11-13, 11-6, 11-8, 9-11, 7-11 என்ற செட் கணக்கில் சோபியா ஜூயன் ஜாங்கிடம் போராடி வீழ்ந்தார். 3-வது ஆட்டத்தில் இந்தியாவின் அயிகா முகர்ஜி 11-8, 11-13, 11-8, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் எல்விரா ராட்டை சாய்த்தார். மற்ற ஆட்டங்களில் மணிகா பத்ரா 11-9, 11-2, 11-4 என்ற நேர்செட்டில் மரியா ஜியாவையும், ஸ்ரீஜா அகுலா 11-6, 11-13, 11-6, 11-3 என்ற செட் கணக்கில் சோபியா ஜூயன் ஜாங்கையும் அடக்கினர்.

லீக் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் சீனா 8 புள்ளிகளுடன் (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடம் பிடித்து 3-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறியது. இந்திய அணி 7 புள்ளியுடன் (3 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், ஹங்கேரி 6 புள்ளியுடன் (2 வெற்றி, 2 தோல்வி) 3-வது இடமும் பெற்று 2-வது சுற்றுக்குள் (ரவுண்ட் 24) நுழைந்தன. ஸ்பெயின் (5 புள்ளி), உஸ்பெகிஸ்தான் (4 புள்ளி) அணிகள் நாக்-அவுட் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

இந்திய பெண்கள் அணி இன்று நடைபெறும் 2-வது சுற்று ஆட்டத்தில் (ரவுண்ட் 24) இத்தாலியுடன் மோதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்