உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கப்பட்டியலில் அமெரிக்கா ஆதிக்கம்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்கா 29 பதக்கத்துடன் முதலிடத்தை ஆக்கிரமித்தது.
புடாபெஸ்ட்,
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 9 நாட்கள் நடந்தது. இதில் 195 நாடுகளைச் சேர்ந்த 2,100 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடைசி நாளான நேற்று முன்தினம் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கினார்.
ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதி சுற்றில் எதிர்பார்க்கப்பட்ட முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2 நிமிடம் 59.92 வினாடிகளில் இலக்கை எட்டி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு பெருத்த ஏமாற்றம் அளித்தது. அமெரிக்கா 2 நிமிடம் 57.31 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. பிரான்ஸ் வெள்ளியும், இங்கிலாந்து வெண்கலமும் பெற்றது.
இந்த போட்டியில் 46 நாடுகள் பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தன. வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்கா 12 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என்று 29 பதக்கத்துடன் முதலிடத்தை ஆக்கிரமித்தது. கனடா (4 தங்கம் உள்பட 6 பதக்கம்) 2-வது இடத்தையும், ஸ்பெயின் (4 தங்கம் உள்பட 5 பதக்கம்) 3-வது இடத்தையும் பிடித்தன. நீரஜ் சோப்ரா 'ஈட்டி' தந்த தங்கத்தின் மூலம் இந்தியா 6 நாடுகளுடன் 18-வது இடத்தை பகிர்ந்தது.
மேலும் இந்த போட்டியில் ஒரு உலக சாதனையும், 7 சாம்பியன்ஷிப் சாதனையும், 73 தேசிய சாதனையும் நிகழ்த்தப்பட்டன. அமெரிக்காவின் நோவா லைல்ஸ் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 4x100 மீட்டர் தொடர் ஓட்டம் என்று 3 தங்கப்பதக்கத்தை அள்ளினார். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தது இன்னொரு சிறப்பம்சமாகும். அடுத்து 20-வது உலக தடகள போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2025-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறுகிறது.