உலக தடகள மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் எல்தோஷ் பால் ஏமாற்றம்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் எல்தோஷ் பால் 9-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தார்.
யூஜின்,
அமெரிக்காவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) இறுதிப்போட்டியில் இந்திய வீரர் எல்தோஷ் பால் உள்பட 12 பேர் களம் இறங்கினர்.
இதில் எல்தோஷ் பால் தனது முதல் 3 முயற்சிகளில் முறையே 16.37 மீட்டர், 16.79 மீட்டர் 13.86 மீட்டர் தூரம் தாண்டி 9-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தார். 'டாப்-8'இடங்களுக்குள் வராததால் அவருக்கு அடுத்த 3 முயற்சிக்கான வாய்ப்பு பறிபோனது.
இதே போல் ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், முகமது அஜ்மல், நாகநாதன் பாண்டி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 7.29 வினாடியில் இலக்கை கடந்து தனது பிரிவில் 6-வது இடமும், ஒட்டுமொத்தத்தில் 12-வது இடமும் பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.