உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன் முதலிடம்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
புடாபெஸ்ட்,
அமெரிக்க வீராங்கனை அசத்தல்
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் உலகின் அதிவேக பெண்மணி யார்? என்பதை தீர்மானிக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் 3-வது நாளான நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. இறுதிப்போட்டியில் 9 வீராங்கனைகள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தனர்.
இதில் கடைசி ஓடுபாதையில் இருந்து ஓட தொடங்கிய அமெரிக்க வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன் முதலில் சற்று பின்தங்கி இருந்தாலும் கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு அனைவரையும் பின்னுக்கு தள்ளி 10.65 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
ஷெல்லி பிரேசருக்கு 3-வது இடம்
கடந்த ஆண்டு நடந்த உலக போட்டியில் 2-வது இடம் பிடித்த ஜமைக்கா வீராங்கனை ஷெரிகா ஜாக்சன் (10.72 வினாடி) மீண்டும் வெள்ளிப்பதக்கம் பெற்றார். நடப்பு சாம்பியனும், 5 முறை தங்கப்பதக்கம் வென்று ஆதிக்கம் செலுத்தியவருமான மற்றொரு ஜமைக்கா வீராங்கனை 36 வயது ஷெல்லி ஆன் பிரேசர் பிரைஸ் 10.77 வினாடியில் இலக்கை எட்டி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.
23 வயதான ஷாகாரி ரிச்சர்ட்சன் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்துள்ளார்.
2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க தகுதி சுற்றில் வெற்றி கண்ட ஷாகாரி ரிச்சர்ட்சன் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் ஒரு மாதம் தடையுடன் அந்த ஒலிம்பிக்கையும் தவறவிட வேண்டியதானது. அத்துடன் அவர் கடந்த ஆண்டு (2022) நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.
2017-ம் ஆண்டுக்கு பிறகு...
நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் ஏற்கனவே வாகை சூடியிருந்தார். பெண்கள் பிரிவில் ஷாகாரி ரிச்சர்ட்சன் வெற்றியின் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டத்தில் இரு பிரிவிலும் அமெரிக்கா 2017-ம் ஆண்டுக்கு பிறகு முழுமையாக கோலோச்சியுள்ளது.
ஷாகாரி ரிச்சர்ட்சன் கூறுகையில், 'எனது முதலாவது பெரிய சர்வதேச போட்டியிலேயே தங்கப்பதக்கம் வென்று இருப்பதால் இதனை நிச்சயமாக ஒரு நல்ல தொடக்கம் என்றே சொல்வேன். இதில் எனது சிறந்த திறன் வெளிப்பட்டது. நான் முன்பை விட நல்ல நிலையை எட்டி இருக்கிறேன். இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன்' என்றார்.