நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதில் தாமதம்: இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் - உலக சங்கம் அதிரடி
நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தை உலக மல்யுத்த சங்கம் இடைநீக்கம் செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டி நாட்டின் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சர்ச்சையில் சிக்கிய பிரிஜ் பூஷனை, மல்யுத்த சம்மேளன பணிகளில் இருந்து விளையாட்டு அமைச்சகம் ஒதுக்கி வைத்தது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட பூபேந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டி மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகித்து வருகிறது.
இதற்கிடையே இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை 45 நாட்களுக்குள் நடத்தும்படி உலக மல்யுத்த சங்கம் கெடு விதித்தது. இதன்படி மே 7-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்குள் நடத்த முடியவில்லை. ஒரு சில மாநில மல்யுத்த சங்கங்களுக்கு ஓட்டுரிமை மறுப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பலமுறை தள்ளிவைக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் இறுதியாக ஆகஸ்டு 12-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங்கும், முன்னாள் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் அனிதா ஷெரானும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
தேர்தலுக்கு ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையில் மறுபடியும் முட்டுக்கட்டை விழுந்தது. அதாவது அரியானா மல்யுத்த சங்கம் சார்பில் சண்டிகாரில் உள்ள அரியானா மற்றும் பஞ்சாப் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 'நாங்கள் தான் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற சங்கம். ஆனால் எங்களுக்கு நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது நியாயமற்றது. எனவே எங்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி, இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதித்தார். இதனால் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியவில்லை.
இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை கால அவகாசத்துக்குள் நடத்தாமல் தொடர்ந்து ஜவ்வாக இழுத்துக்கொண்டே போவதை அறிந்த உலக மல்யுத்த சங்கம், இந்திய மல்யுத்த சம்மேளனத்தை அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் அடுத்த மாதம் 16-ந்தேதி தொடங்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர், வீராங்கனைகள் நமது தேசிய கொடியின் கீழ் பங்கேற்க முடியாது. பொதுவான வீரர்கள் என்ற பெயரில் அனுமதிக்கப்படுவார்கள். அதில் வீரர், வீராங்கனைகளின் சிறப்பான செயல்பாடு இந்தியாவின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
அதே சமயம் செப்டம்பர் 23-ந்தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கும் ஆசிய விளையாட்டில் நமது வீரர்கள் இந்திய கொடியின் கீழ் கலந்து கொள்வதில் சிக்கல் இருக்காது. ஏனெனில் இந்த போட்டிக்கு வீரர்களை இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுப்புகிறது. இதில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலையீடு கிடையாது.
இனி, உலக மல்யுத்த சங்கத்தின் அறிவுரையை பின்பற்றி இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும் போது, இடைநீக்கம் நடவடிக்கை தளர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.