36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் இன்று தொடக்கம்

36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 7 ஆண்டுகளுக்கு பின் குஜராத்தில் இன்று தொடங்கி அக்டோபர் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Update: 2022-09-27 04:15 GMT

குஜராத்:

இந்தியன் ஒலிம்பிக்ஸ் என அழைக்கப்படும் தேசிய விளையாட்டு போட்டிகள் முதன்முறையாக குஜராத்தில் நடைபெறுகிறது. கடந்த 2020-இல் கோவாவில் நடைபெறவிருந்த இப்போட்டி கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குஜராத்தில் அகமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் ஆகிய ஆறு நகரங்களில் நடைபெறுகிறது. கடைசியாக 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது.

இப்போட்டியில் கால்பந்து, டென்னிஸ், பேட்மிட்டன், கூடைப்பந்து உட்பட 36 விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. முன்கூட்டியே டேபிள் டென்னிஸ் ஆட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டன. கோ-கோ, மல்லர் கம்பம், யோகாசனம் ஆகியவைகள் முதன்முறையாக இடம் பெறுகின்றன. இதில் சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா, பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா ஆகியோர் காயத்தால் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ராபாய் சானு (பளுதூக்குதல்), லவ்லினா போரோகைன் (குத்துச்சண்டை), ஸ்ரீஹரி நட்ராஜ் (நீச்சல்), தூத்தி சாந்து, ஹிமா தாஸ், அமலன், முரளி ஸ்ரீசங்கர், அன்னுராணி, ஜோதி யாரஜி (தடகளம்) லக்ஷயா சென், பிரணாய் (பாட்மின்டன்), மானு பாக்கர் (துப்பாக்கி சுடுதல்), அதானு தாஸ் (வில் வித்தை), உள்ளிட்டோர் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.

செப்டம்பர் 27 (இன்று) தொடங்கும் இப்போட்டி அக்டோபர் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7 ஆண்டுகள் கழித்து தற்போது நடைபெற உள்ளதால் வீரர், வீராங்கனைகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்