தேசிய சீனியர் தடகளம்: உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை கிரேசினா தங்கம் வென்றார்..!
மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை,
மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. உலக தடகளம் மற்றும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ள இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 4-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 'டிரிபிள்ஜம்ப்' (மும்முறை தாண்டுதல்) பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 14.14 மீட்டர் தூரம் தாண்டி தேசிய சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அத்துடன் காமன்வெல்த் போட்டிக்கான தகுதி இலக்கையும் எட்டினார்.
இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு கேரள வீராங்கனை மயூகா ஜானி 14.11 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜஸ்வர்யா நேற்று தகர்த்தார். வட்டு எறிதலில் பஞ்சாப் வீராங்கனை நவ்ஜீத் கவுர் (55.67 மீட்டர்) தங்கப்பதக்கமும், அரியானா வீராங்கனை நிதி ராணி (50.86 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை காருண்யா (49.24 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை கிரேசினா மெர்லி 1.82 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் போட்டிகள் நடக்கிறது.