டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அசத்தல் வெற்றி
சவுதி அரேபியாவில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில், உலக தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள வாங் மேன்யுவை வீழ்த்தி, இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.;
ஜெட்டா,
சவுதி அரேபியாவில் சவுதி ஸ்மேஷ் 2024 என்ற பெயரிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா மற்றும் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள வாங் மேன்யு விளையாடினர்.
இந்த போட்டியில், தொடக்கம் முதலே விறுவிறுப்பு காணப்பட்டது. முதல் செட்டை வாங் கைப்பற்றி பத்ராவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். எனினும், அதிரடியாக விளையாடிய பத்ரா அடுத்த செட்டை தன்வசப்படுத்தினார். தொடர்ந்து, அடுத்தடுத்த செட்களை எளிதில் கைப்பற்றி மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.
இந்த போட்டியில், 6-11, 11-5, 11-7, 12-10 என்ற செட் கணக்கில் பத்ரா வெற்றி பெற்றார். இதனால், 16 சுற்றுகள் கொண்ட அடுத்த போட்டிக்கு அவர் முன்னேறி உள்ளார்.
இதற்கு முன் மார்ச் மாதத்தில் நடந்த சிங்கப்பூர் ஸ்மேஷ் 2024 போட்டியில், வாங் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டியிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த வாங்கிற்கு, மணிகா பத்ரா அதிர்ச்சி அளித்துள்ளார்.
கடந்த காலங்களில் நடந்த 5 போட்டிகளின்போதும், பத்ராவை வாங் வீழ்த்தி வெற்றி பெற்றார். அவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதிய இந்த 6-வது போட்டியின் தொடக்கத்திலும் வாங் வெற்றி பெறும் சூழலே காணப்பட்டது. முதல் செட்டில் அவர் வெற்றி பெற்றார்.
ஆனால், மணிகா பத்ரா தன்னுடைய அதிரடி விளையாட்டால் அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று கலப்பு இரட்டையர் போட்டியில், ஹர்மீத் தேசாய் மற்றும் யஷஸ்வினி கோர்பதே இணை, ஸ்பெயின் நாட்டின் ஆல்வரோ ரோபிள்ஸ் மற்றும் மரியா ஜியாவோ இணையை 3-2 (11-5, 5-11, 3-11, 11-7, 11-7) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.