மாநில பெண்கள் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி 'சாம்பியன்'
மாநில பெண்கள் கைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை,
லட்சுமி நகர் மற்றும் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த பள்ளி அணிகளுக்கான (ஆண்கள் மற்றும் பெண்கள்) கைப்பந்து போட்டியும், ஜோன்ஸ் பவுண்டேசன் ஆதரவுடன் மாநில அழைப்பு பெண்கள் கைப்பந்து போட்டியும் சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகர் 7-வது தெருவில் உள்ள விளையாட்டு திடலில் நடந்தது.
இதில் மாநில பெண்கள் கைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 25-15, 25-17, 25-15 என்ற நேர்செட்டில் டாக்டர் சிவந்தி கிளப்பை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி 25-8, 25-12, 25-12 என்ற நேர்செட்டில் யுனைடெட் வாலிபால் கிளப்பை வீழ்த்தியது.
பள்ளி அணிகளுக்கான ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் அணி (செங்கல்பட்டு) 25-17, 25-18 25-20 என்ற செட் கணக்கில் செயின்ட் மேரிஸ் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மான்போர்ட் 25-12, 25-11 என்ற நேர்செட்டில் ஏ.ஜே.எஸ். நிதி அணியை வென்றது. இதன் பெண்கள் பிரிவு இறுதிசுற்றில் லேடி சிவசாமி (மயிலாப்பூர்) அணி 25-11, 25-9 என்ற நேர்செட்டில் பென்டிக் அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் செயின்ட் ஹெலன் அணி 25-11, 25-9 என்ற நேர்செட்டில் சென்னை பெண்கள் பள்ளி (சைதாப்பேட்டை) அணியை தோற்கடித்தது.
பரிசளிப்பு விழாவுக்கு வருமானவரி முன்னாள் தலைமை கமிஷனர் ஐ.விஜயகுமார் தலைமை தாங்கினார். போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. ரவி, தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மன் எஸ்.என். ஜெயமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர். ஜோன்ஸ் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் எம்.ஜோன்ஸ், தொழில் அதிபர்கள் விக்னேஷ் காந்தி, ஹரிச்சந்திரன், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல தலைவர் எம்.சந்திரன், போட்டி அமைப்பு குழு செயலாளர் எம்.அழகேசன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.