விளையாட்டு வீரர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: இந்திய விளையாட்டு கழகம் அறிவிப்பு
இதில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும்.
சென்னை,
இந்திய உணவு கழகம் சார்பில் விளையாட்டில் சிறந்து விளங்கும் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான (2023-24) விளையாட்டு உதவித் தொகைக்கு தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விளையாட்டு கழகத்தின் தென்மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் ஆகியவற்றின் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 15-18 மற்றும் 18-24 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
கால்பந்து, ஆக்கி, கிரிக்கெட், பளுதூக்குதல் (ஆண்கள் மட்டும்), டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், தடகளம், நீச்சல் (இரு பாலரும்) ஆகிய போட்டிகளில் இந்திய அணிக்காக சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் பங்கேற்றவர்களும், தேசிய தனிநபர் போட்டிகளில் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் முதல் 6 இடங்களை பிடித்தவர்களும் மற்றும் தேசிய மற்றும் அகில இந்திய பல்கலைக்கழக போட்டியில் மாநிலம் சார்பில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும். இது குறித்து மேலும் விவரங்களை www.fci.gov.in. என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று இந்திய உணவு கழகத்தின் தென்மண்டல மொதுமேலாளர் (மக்கள் தொடர்பு) ஷைனி வில்சன் தெரிவித்துள்ளார்.