44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க பிரதமர் மோடி சென்னை வருகை..!
44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக 28-ந் தேதி சென்னை வருகிறார்.
சென்னை,
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியை தொடங்கிவைப்பதற்காக பிரதமா் மோடி வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு பிரதமா் மோடி சென்னை பழைய விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஓய்வறையில் மாலை 5.20 மணி வரை தங்கி ஓய்வெடுக்கிறார்.
மாலை 5.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு அடையாறு ஐ.என்.எஸ். புறப்பட்டு செல்கிறார். மாலை 5.50 மணிக்கு அடையாறு ஐ.என்.எஸ். தளத்தில் இருந்து காரில் புறப்பட்டு மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்கிறார்.
அங்கு மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்கும் விழாவில் கலந்து கொள்கிறாா். விழாவை முடித்துவிட்டு இரவு 7.35 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் இருந்து காரில் புறப்படும் பிரதமா் மோடி இரவு 7.50 மணிக்கு சென்னை கிண்டி ஆளுநா் மாளிகை வந்தடைகிறாா். இரவு அங்கேயே தங்குகிறாா்.
29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.55 மணிக்கு ஆளுநா் மாளிகையில் இருந்து காரில் புறப்படும் பிரதமா் மோடி, காலை 10 மணிக்கு கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் சென்றடைகிறாா். காலை 10 மணியில் இருந்து 11.30 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறாா்.
காலை 11.35 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து காரில் புறப்படும் பிரதமா், காலை 11.50 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்தடைகிறாா்.
அங்கு பிரதமருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின்பு காலை 11.55 மணிக்கு இந்திய விமானப்படை தனி விமானத்தில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடியின் 2 நாள் சுற்றுப்பயணம் காரணமாக டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை வந்து உள்ளனர்.