எங்கள் போராட்டம் அரசுடன் இல்லை - சாக்ஷி மாலிக்
எங்களின் போராட்டம் பெண் மல்யுத்த வீரர்களுக்கானது என்று சாக்ஷி மாலிக் கூறினார்
புதுடெல்லி,
பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷண் சரண் சிங். மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக், மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா. பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.
இந்த சூழலில், புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாக தேர்வானதற்கு வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்தது.
புதிதாக தேர்வான மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது குறித்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
" இன்னும் எழுத்து பூர்வமாக நான் எதையும் பார்க்கவில்லை. சஞ்சய் சிங் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டாரா அல்லது மற்றவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்களா என்பது எனக்கு தெரியாது. ஒட்டு மொத்த நிர்வாகமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. எங்களது போராட்டம் அரசுடன் இல்லை. எங்களின் போராட்டம் பெண் மல்யுத்த வீரர்களுக்கானது.
நான் எனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளேன். இனிமேல் வரவிருக்கும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் "
இவ்வாறு கூறியுள்ளார்..