2026 காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்தும் திட்டம் இல்லை; குஜராத் அரசு

2026-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாக விக்டோரியா மாகாண அரசு அறிவித்தது.

Update: 2023-07-20 06:50 GMT

அகமதாபாத்,

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள 5 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 20 வகையான விளையாட்டுகளும், 9 வகையான பாரா போட்டிகளும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாக விக்டோரியா மாகாண அரசு நேற்று தடாலடியாக அறிவித்தது. போட்டியை நடத்த தாங்கள் மதிப்பிட்ட பட்ஜெட்டை விட தற்போது அதிக தொகை பிடிக்கும் என்று தெரியவந்து இருப்பதால் இந்த கடினமான முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா அரசின் திடீர் அறிவிப்பால் 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு திட்டமிடப்படி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 2026 காமன்வெல்த் விளையாட்டு தொடரை நடத்தும் உரிமையை குஜராத் மாநில அரசு ஏலம் எடுக்க உள்ளதாகத் தகவல் நேற்று வெளியாகியது.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து குஜராத் அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அதில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை . 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெறுவதன் மீதே முழு கவனம் உள்ளது என்றும் குஜராத் அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இருந்து ஆஸ்திரேலியா திடீரென விலகியதை அடுத்து, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவதற்கு மாநில அதிகாரிகள் ஏலம் எடுக்கலாம் என்று வெளியான செய்திகளை அதிகாரிகள் மறுத்தனர்.

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு மாநில அரசு யோசிக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு மூத்த அரசாங்க அதிகாரி, "இதுவரை அப்படிப்பட்ட எந்த நடவடிக்கையும் தனக்குத் தெரியாது" என்றார்.

இது குறித்து மாநில விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் துறையின் துணைச் செயலர் (விளையாட்டு) யு ஏ படேல் ஒரு தனியார் ஊடகப்பிரிவிடம் கூறுகையில் , "2036 ஒலிம்பிக்கிற்கான நடத்தும் உரிமையைப் பெறுவதே இப்போது எங்களின் கவனம். தற்போது வரை, 2026 காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு ஏலம் எடுப்பது குறித்து எங்கள் தரப்பிலிருந்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்