தேசிய விளையாட்டுப் போட்டி: தமிழகத்திற்கு நீச்சலில் இரு பதக்கம்
தேசிய விளையாட்டில் தமிழகத்திற்கு நீச்சலில் மேலும் இரு பதக்கம் கிடைத்தது.
ஆமதாபாத்,
36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் உள்ள ஆமதாபாத், ராஜ்கோட் உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. பெண்களுக்கான நீச்சலில் 400 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் கர்நாடகாவின் ஹாஷிகா 4 நிமிடம் 32.17 வினாடிகளில் இலக்கை அடைந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார்.
14 வயதான ஹாஷிகா நடப்பு தொடரில் ருசித்த 6-வது தங்கம் இதுவாகும். அத்துடன் ஒரு வெண்கலமும் அவர் வென்று இருக்கிறார். இதேபோல் குஜராத் நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் 50 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் 29.77 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய சாதனையுடன் 3-வது தங்கத்தை அறுவடை செய்தார்.
தமிழகத்திற்கு நேற்று இரண்டு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. நீச்சலில் 4x100 மீட்டர் கலப்பு பிரிவில் சத்யா, சக்தி, மான்யா முக்தா, பவன் குப்தா ஆகியோர் அடங்கிய தமிழக குழுவினர் 3 நிமிடம் 50.74 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலம் வென்றனர். கர்நாடகா தங்கமும், மராட்டியம் வெள்ளியும் பெற்றது.
ஆண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லேவில் தமிழகத்தின் ரோகித் பெனிடிக்சன் (2 நிமிடம் 08.66 வினாடி) வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். கேரளாவின் சஜன் பிரகாஷ் (2 நிமிடம் 05.81 வினாடி) சாதனையுடன் தங்கப்பதக்கமும், கர்நாடகாவின் எஸ்.சிவா (2 நிமிடம் 07.47 வினாடி) வெள்ளிப்பதக்கமும் சொந்தமாக்கினர். சஜன் பிரகாசுக்கு இது 5-வது தங்கமாகும்.
குத்துச்சண்டையில் பஞ்சாப்பின் சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), அசாமின் ஷிவ தபா (67 கிலோ), தமிழகத்தின் ராம கிருஷ்ணன் பாலா (51 கிலோ) உள்ளிட்டோர் தங்களது தொடக்க ஆட்டங்களில் வெற்றி கண்டு கால்இறுதிக்கு முன்னேறினர். அதே சமயம் 75 கிலோ பிரிவில் தமிழக வீராங்கனை பிரியா 0-5 என்ற கணக்கில் டெல்லியின் ஷலகா சிங்கிடம் தோல்வி அடைந்தார்.
ஜூடோவில் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டெல்லியின் துலிகா மான் (78 கிலோவுக்கு மேல்) பஞ்சாப்பின் கன்வர்பிரீத் கவுரை தோற்கடித்து மகுடம் சூடினார்.
பதக்கப்பட்டியலில் சர்வீசஸ் 42 தங்கம் உள்பட 100 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழகம் 19 தங்கம், 19 வெள்ளி, 21 வெண்கலம் என்று 59 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.