தேசிய தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் தங்கம் வென்று அசத்தல்
தேசிய தடகள போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
புவனேஷ்வர்,
தேசிய தடகள போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
சிவக்குமாருக்கு தங்கம்
மாநிலங்களுக்கு இடையிலான 62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. சீனாவில் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான கடைசி தகுதி சுற்றான இந்த போட்டியில் 750-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
போட்டியின் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் பி.சிவக்குமார் 10.37 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். சேலத்தை சேர்ந்த சிவக்குமார் ஐ.சி.எப்.பில் பணியாற்றி வருகிறார். பஞ்சாப் வீரர் ஹர்ஜித் சிங் (10.45 வினாடி) வெள்ளிப்பதக்கத்தையும், தமிழக வீரரான தஞ்சாவூரை சேர்ந்த கே.இலக்கியதாசன் (10.47 வினாடி) வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
400 மீட்டர் ஓட்டத்தில், சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்ட இலங்கை வீரர் கலிங்கா குமராகே (46.54 வினாடி) தங்கப்பதக்கமும், கேரள வீரர்கள் முகமது அனாஸ் (45.76 வினாடி) வெள்ளிப்பதக்கமும், முகமது அஜ்மல் (45.90 வினாடி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். டெல்லி வீரர் அமோஜ் ஜேக்கப் (45.91 வினாடி) 4-வது இடம் பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்த வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி இலக்கை (46.17 வினாடி) அடைந்தனர். எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
800 மீட்டர் ஓட்டத்தில் அரியானாவின் கிரிஷான் குமார் (1 நிமிடம் 46.17 வினாடி) முதலிடமும், கேரளாவின் முகமது அப்சல் (1 நிமிடம் 47.47 வினாடி) 2-வது இடமும், தமிழகத்தின் பிரதீப் செந்தில் குமார் (1 நிமிடம் 48.10 வினாடி) 3-வது இடமும் பிடித்ததுடன் ஆசிய விளையாட்டுக்கான தகுதி இலக்கையும் எட்டினர்.
வட்டு எறிதலில் பஞ்சாப் வீரர்கள் கிர்பால் சிங் (57.39 மீட்டர்) தங்கப்பதக்கத்தையும், ககன்தீப் சிங் (55.69 மீட்டர்) வெள்ளிப்பதக்கத்தையும் தட்டிச் சென்றனர். அரியானா வீரர் நிர்பாய் சிங்குக்கு (55.21 மீட்டர்) வெண்கலப்பதக்கம் கிடைத்தது. 35 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் அரியானா வீரர் ஜூனித் கான் 3 மணி 37 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
'அதிவேக வீராங்கனை'
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஆந்திராவின் ஜோதி யர்ராஜி வெற்றி பெற்றார். இந்தியாவின் அதிவேக பெண்மணியாக உருவெடுத்த அவர் 11.46 வினாடியில் பந்தய தூரத்தை எட்டினார். ஒடிசாவின் சர்பானி நந்தா (11.59 வினாடி) வெள்ளிப்பதக்கத்தையும், அரியானாவின் ஹிமாஸ்ரீ ராய் (11.71 வினாடி) வெண்கலப்பதக்கத்தையும் அறுவடை செய்தனர்.
400 மீட்டர் ஓட்டத்தில், காயத்தில் இருந்து மீண்டு 4 ஆண்டுக்கு பிறகு களம் திரும்பிய அரியானா வீராங்கனை அஞ்சலி தேவி (51.48 வினாடி) தங்கப்பதக்கத்தையும், மற்றொரு அரியானா வீராங்கனை ஹிமான்ஷி மாலிக் (51.76 வினாடி) வெள்ளிப்பதக்கத்தையும், தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் (52.49 வினாடி) வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர். ஈரோட்டை சேர்ந்த வித்யா வருமான வரித்துறையில் (சென்னை) பணியாற்றுகிறார். மராட்டியத்தின் ஐஸ்வர்யா (52.79 வினாடி) 4-வது இடம் பெற்றார். டாப்- 4 இடங்களை பிடித்தவர்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி இலக்கை (52.96 வினாடி) எட்டினர்.
35 கிலோ மீட்டர் தூர நடைபந்தய பந்தயத்தில் தேசிய சாதனையாளரான பஞ்சாப் வீராங்கனை மஞ்சு ராணி 3 மணி 21 நிமிடம் 31 வினாடியில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார்.