தேசிய தடகளம்: போல்வால்ட் பந்தயத்தில் தமிழக வீராங்கனை பவித்ராவுக்கு தங்கம்

62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடந்து வருகிறது.

Update: 2023-06-17 20:05 GMT

கோப்புப்படம் 

புவனேஷ்வர்,

மாநிலங்களுக்கு இடையிலான 62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் தமிழக வீராங்கனை பவித்ரா 4.10 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியதுடன் சீனாவில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கும் தகுதி பெற்றார். 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆந்திர வீராங்கனை ஜோதி யர்ராஜி (12.92 வினாடி) முதலிடமும், தமிழக வீராங்கனை நித்யா (13.48 வினாடி) 2-வது இடமும், தெலுங்கானா வீராங்கனை அக்சரா நந்தினி (13.55 வினாடி) 3-வது இடமும் பிடித்ததுடன் ஆசிய விளையாட்டுக்கான தகுதி இலக்கையும் (13.63 வினாடி) எட்டினர்.

ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் (17.07 மீட்டர்) தங்கப்பதக்கமும், கேரள வீரர்கள் அப்துல்லா அபூபக்கர் (16.88 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், எல்டோஸ் பால் (16.75 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். அத்துடன் மூவரும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி இலக்கை (16.60 மீட்டர்) எட்டினர். உயரம் தாண்டுதலில் மராட்டிய வீரர் சர்வேஷ் அனில் குஷார் (2.24 மீட்டர்) முதலிடமும், கர்நாடக வீரர் ஜெஸ்சி சந்தேஷ் (2.24 மீட்டர்) 2-வது இடமும், தமிழக வீரர் பாரதி விஸ்வநாதன் (2.17 மீட்டர்) 3-வது இடமும் பிடித்தனர். முதல் 2 இடங்களை பிடித்த வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி கண்டனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்