தேசிய தடகளம்: 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கார்த்திக் குமாருக்கு தங்கம்- ஆசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி

62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று காலை தொடங்கியது.

Update: 2023-06-15 22:46 GMT

கோப்புப்படம் 

புவனேஷ்வர்,

தேசிய தடகள போட்டியின் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உத்தரபிரதேச வீரர் கார்த்திக் குமார் தங்கப்பதக்கம் வென்றதுடன் ஆசிய விளையாட்டு போட்டிக்கும் தகுதி பெற்றார்.

தேசிய தடகளம்

மாநிலங்களுக்கு இடையிலான 62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று காலை தொடங்கியது.

சீனாவில் வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான கடைசி தகுதி சுற்றான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தொடக்க நாளில் நடந்த ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உத்தரபிரதேச வீரர் கார்த்திக் குமார் 29 நிமிடம் 01.84 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்றொரு உத்தரபிரதேச வீரர் குல்வீர் சிங் 29 நிமிடம் 03.78 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், டெல்லி வீரர் பிரித்தம் குமார் 29 நிமிடம் 22.36 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மத்தியபிரதேச வீரர் ஹர்மன்ஜோத் சிங் 29 நிமிடம் 26.86 வினாடியில் கடந்து 4-வது இடத்தை பெற்றார்.

4 வீரர்கள் தகுதி இலக்கை எட்டினர்

ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திற்கு தகுதி பெற 29 நிமிடம் 30 வினாடியை இலக்காக இந்திய தடகள சம்மேளனம் நிர்ணயித்துள்ளது. இந்த தகுதி இலக்கை முதல் 4 இடங்களை பெற்ற வீரர்களும் எட்டி இருக்கின்றனர். இலக்கை 4 வீரர்கள் எட்டினாலும் இரண்டு பேருக்கு மட்டுமே ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில் ஒரு பந்தயத்துக்கு ஒரு நாடு சார்பில் 2 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். 2 வீரர்களுக்கு மேல் தகுதி பெறும் பட்சத்தில் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் தான் ஆசிய போட்டிக்ககான அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று இந்திய தடகள அணியின் தலைமை பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இமாச்சலபிரதேச வீராங்கனை சீமா (34 நிமிடம் 20.01 வினாடி) நடப்பு சாம்பியனான மராட்டியத்தின் சஞ்சிவானி ஜாதவை பின்னுக்கு தள்ளி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் ஆண்கள் பிரிவில் அரியானா வீரர் சந்தீப் குமாரும், பெண்கள் பிரிவில் ராஜஸ்தான் வீராங்கனை பாவ்னா ஜாட்டும் முதலிடத்தை பிடித்தனர். தேசிய சாதனையாளரான பிரியங்கா கோஸ்வாமி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் தொடக்க சுற்றில் அஞ்சலி தேவி (அரியானா), வித்யா ராம்ராஜ் (தமிழ்நாடு), ஐஸ்வர்யா மிஸ்ரா (மராட்டியம்) தாண்டி ஜோதிகா ஸ்ரீ (ஆந்திரா) ஆகியோர் தங்களது பிரிவில் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினர். அஞ்சலி தேவி 52.89 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து ஆசிய விளையாட்டு போட்டி தகுதி இலக்கை (52.96 வினாடி) எட்டிப்பிடித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்