உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் இறுதிப்போட்டிக்கு தகுதி

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதலிலும், அவினாஷ் சாப்லே 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்திலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Update: 2022-07-16 18:51 GMT

யூஜின்,

ஸ்ரீசங்கர் சாதனை

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல் நாளில் நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் 32 பேர் பங்கேற்றனர். அவர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் 8.15 மீட்டர் தூரம் தாண்டுபவர்கள் அல்லது அதற்கு குறைவான நிலையிலும் சிறந்த திறனை வெளிப்படுத்தும் 'டாப்-12' வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

இதன்படி, ஜப்பான் வீரர் யுகி ஹாஷிகா (8.18 மீட்டர்) முதலிடமும், அமெரிக்க வீரர் மர்குஸ் டென்டி (8.16 மீட்டர்) 2-வது இடமும், சுவீடன் வீரர் தோபிஸ் மொன்ட்லெர் (8.10 மீட்டர்) 3-வது இடமும், இந்திய வீரர் எம்.ஸ்ரீசங்கர் (8 மீட்டர்) 7-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இதன் மூலம் ஸ்ரீசங்கர் உலக தடகள போட்டியின் நீளம் தாண்டுதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். கேரளாவை சேர்ந்த 23 வயதான ஸ்ரீசங்கர் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியில் 8.36 மீட்டர் தூரம் தாண்டி தேசிய சாதனை படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்கள் ஜெஸ்வின் ஆல்ட்ரின் (7.79 மீட்டர்) 20-வது இடமும், முகமது அனீஸ் யாஹியா (7.73 மீட்டர்) 23-வது இடமும் பெற்று வெளியேறினர். 12 வீரர்கள் இடையிலான நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.50 மணிக்கு நடக்கிறது.

அவினாஷ் சாப்லே அசத்தல்

ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் கலந்து கொண்ட 41 வீரர்கள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு தகுதி சுற்றில் ஓடினர். இதில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே 8 நிமிடம் 18.75 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து ஒட்டுமொத்தத்தில் 6-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். தகுதி சுற்று முடிவில் 15 பேர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். மராட்டியத்தை சேர்ந்த அவினாஷ் சாப்லே உலக போட்டியில் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே 2019-ம் ஆண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

ஆண்களுக்கான குண்டு எறிதலில் களம் காண இருந்த இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் காயம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் உருவான வலி குறையாததால் அவர் விலகல் முடிவை எடுத்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வர நாள் பிடிக்கும் என்பதால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் (வருகிற 28-ந் தேதி தொடக்கம்) தன்னால் பங்கேற்க இயலாது என்று பஞ்சாப்பை சேர்ந்த 27 வயது தஜிந்தர் பால் சிங் தெரிவித்துள்ளார்.

நடைபந்தயம்

ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைபந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப் குமார் 1 மணி 31 நிமிடம் 58 வினாடியில் இலக்கை கடந்து 40-வது இடத்தை பெற்றார். இந்த போட்டியில் மொத்தம் 43 பேர் கலந்து கொண்டனர். பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைபந்தயத்திலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 36 பேர் கலந்து கொண்ட இதில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி 1 மணி 39 நிமிடம் 42 வினாடியில் இலக்கை எட்டி 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்