பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிக்கான இந்திய அணியில் லவ்லினா, நிகாத் ஜரீன்

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிக்கான இந்திய அணியில் லவ்லினா, நிகாத் ஜரீன் இடம் பிடித்துள்ளனர்.

Update: 2023-02-28 00:56 GMT

புதுடெல்லி,

பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் மார்ச் 15-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி இந்தியாவில் நடப்பது இது 3-வது முறையாகும். இந்த மெகா குத்துச்சண்டை களத்தில் 74 நாடுகளை சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.20 கோடியாகும். இதில் பல்வேறு எடை பிரிவுகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு மொத்தம் ரூ.10 கோடி பரிசாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப்பில் இரு வெண்கலப் பதக்கமும் வென்றவரான லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), 50 கிலோ எடைப்பிரிவின் நடப்பு உலக சாம்பியனான நிகாத் ஜரீன், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் நிது காங்காஸ் உள்ளிட்ட வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

அணி குறித்து இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய் சிங் கூறுகையில் 'கடந்த சில வருடங்களாக குத்துச்சண்டை அரங்கில் இந்தியா பலம் வாய்ந்த நாடாக விளங்குகிறது. உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்த திறமையான அணியின் மூலம் நமது நிலையை உறுதிப்படுத்த விரும்புகிறோம். நமது வீராங்கனைகள் மீண்டும் நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்புகிறேன்' என்றார்.

இந்திய குத்துச்சண்டை அணி வருமாறு:-

நிது காங்காஸ் (48 கிலோ), நிகாத் ஜரீன் (50 கிலோ), சாக்ஷி சவுத்ரி (52 கிலோ), பிரீத்தி (54 கிலோ), மனிஷா மவுன் (57 கிலோ), ஜாஸ்மின் லாம்போரியா (60 கிலோ), ஷாஷி சோப்ரா (63 கிலோ), மஞ்சு பாம்போரியா (66 கிலோ), சனமச்சா சானு (70 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), சவீட்டி போரா (81 கிலோ), நுபுர் ஷோரன் (81 கிலோவுக்கு மேல்).

Tags:    

மேலும் செய்திகள்