கேலோ இந்தியா கோ-கோ போட்டி இன்று தொடக்கம்: தமிழ்நாடு-டெல்லி அணிகள் மோதல்

கோ-கோ போட்டிகள் இன்று காலை தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

Update: 2024-01-26 00:18 GMT

கோப்புப்படம்

மதுரை,

கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கடந்த 21-ந் தேதி தொடங்கின. 23-ந் தேதி வரை கட்கா போட்டிகள் நடந்தன. அதை தொடர்ந்து இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை கோ-கோ போட்டிகள் நடைபெறுகின்றன.

இதற்காக தேனியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன் தலைமையில் பெண்கள் கோ-கோ அணியினரும், சிவகங்கை மாவட்ட விளையாட்டு அதிகாரி ரமேஷ்கண்ணன் தலைமையில் ஆண்கள் கோ-கோ அணியினரும் கடந்த 20 நாட்களாக சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.

பயிற்சி முடிந்ததும் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆண்கள், பெண்கள் அணியினர் நேற்று மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு வந்தனர். அங்கு பயிற்சியாளர்கள் கீதா, புவனேஸ்வரி, செல்வம், காளிதாஸ், ராஜா ஆகியோர் தலைமையில் பெண்கள், ஆண்கள் அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

இந்த போட்டியில் தமிழ்நாடு, ஒடிசா, மராட்டியம், பஞ்சாப், மேற்குவங்காளம், ராஜஸ்தான், டெல்லி, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மாநில அணிகள் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியினரும் மதுரைக்கு வந்து கொண்டு உள்ளனர். அவர்களுக்கு ஏற்ற வகையில் காலை, மதியம், இரவு என 3 வேளையும் சத்துள்ள உணவுகள் அங்கே தயார் செய்து பரிமாறப்படுகின்றன.

கோ-கோ போட்டிகள் இன்று காலை தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முதல் போட்டி டெல்லி-தமிழ்நாடு ஆண்கள் அணிகள் மோதுகின்றன. மாலை 6 மணி வரை போட்டி நடைபெறும். ஒரு அணியில் 15 வீரர்கள் இடம் பெற்று இருப்பார்கள். அதில் 9 வீரர்கள் மட்டுமே களம் இறக்கப்படுவார்கள். ஒவ்வொரு போட்டியும் சுமார் 54 நிமிடங்கள் நடைபெறும். போட்டிக்கான ஏற்பாடுகளை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்