ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; பிரனாய் தோல்வியால் முடிவுக்கு வந்த இந்தியாவின் சவால்

2-வது செட்டில் அதிரடி காட்டிய சென் 16-21 என்ற புள்ளி கணக்கில் செட்டை கைப்பற்றினார்.

Update: 2023-11-16 19:53 GMT

குமமோட்டோ,

ஜப்பான் நாட்டின் குமமோட்டோ நகரில் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் கடந்த 14-ந்தேதி தொடங்கி, வருகிற 19-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகின்றன. இதில், ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், முதல் சுற்று ஆட்டத்தில் ஹாங்காங்கை சேர்ந்த வீரர் லீ சியுக் யியுவுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில், சீன தைபேவை சேர்ந்த சவ் டையன் சென்னுக்கு எதிராக நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் பிரனாய் முதல் செட்டை 21-19 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

ஆனால், 2-வது செட்டில் அதிரடி காட்டிய சென் 16-21 என்ற புள்ளி கணக்கில் செட்டை கைப்பற்றினார். இதனால், வெற்றியை முடிவு செய்யும் 3-வது செட்டை யார் கைப்பற்றுவது? என்பதில் கடுமையான போட்டி காணப்பட்டது.

ஒரு கட்டத்தில், 12-4 என்ற புள்ளி கணக்கில் சென் முன்னிலை பெற்றபோதும், பிரனாய் மெதுவாக முன்னேறி 19-19 என சமநிலையை நோக்கி போட்டியை கொண்டு சென்றார். எனினும், 21-19 என்ற புள்ளி கணக்கில் 3-வது செட்டை கைப்பற்றி சென் வெற்றி பெற்றார்.

காமன்வெல்த் போட்டிகளில் சாம்பியனான இந்திய வீரர் லக்சயா சென் மற்றும் பிரியன்ஷு ரஜாவத் ஆகியோர் முதல் சுற்று போட்டியில் தோற்று வெளியேறி இருந்தனர். 2-வது சுற்றில் பிரனாய் தோல்வி அடைந்த நிலையில், இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்