'போர் பாதிப்புக்கு மத்தியிலும் தங்கம் வென்றது பெரிய விஷயம்' உக்ரைன் வீராங்கனை நெகிழ்ச்சி
44-வது செஸ் ஒலிம்பியாட்டில் பெண்கள் பிரிவில் தோல்வியே சந்திக்காமல் உக்ரைன் அணியினர் தங்கப்பதக்கம் வென்று நெருக்கடிக்கு மத்தியிலும் தங்களது மனஉறுதியை நிரூபித்தனர்.
சென்னை,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இருப்பதால் அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் அவர்கள் தங்கப்பதக்கத்தை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். வெற்றிக்கு பிறகு உணர்வுபூர்வமான நிலையில் உக்ரைன் வீராங்கனை அன்னா உஷேனினா அன்னா கூறுகையில்,
'போர் காரணமாக எங்களுடைய வீடுகள் சேதம் அடைந்து விட்டதால் வேறு இடத்துக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இந்த போட்டிக்கு நாங்கள் தயாராகுவது சிரமமாக இருந்தது. இந்த கடினமான சூழ்நிலையில் நாங்கள் வெற்றி பெற்று இருப்பது மிகப்பெரிய விஷயமாகும்.
இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அதே சமயம் இந்த வெற்றியால் எங்களது நாட்டின் நிலைமை மாறிவிடும் என்று நினைக்கவில்லை. எங்கள் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறோம்' என்றார்.