இந்திய தேக்வாண்டோ சம்மேளன தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு

இந்திய தேக்வாண்டோ சம்மேளன தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-11-14 22:17 GMT

புதுடெல்லி,

இந்திய தேக்வாண்டோ (தற்காப்பு கலை) சம்மேளனத்தின் 2022-2026-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான ஐசரி கே.கணேஷ், சஞ்சய் ராய் ஷெர்புரியா (குஜராத்) ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் ஐசரி கே.கணேஷ் 38-30 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய தலைவராக தேர்வானார். இதே போல் ஆர்.டி.மங்கேஷ்கர் (கோவா) 47-27 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் பிரபாத் குமார் ஷர்மாவை (ஜார்கண்ட்) தோற்கடித்து புதிய பொதுச்செயலாளராகவும், அரியானாவை சேர்ந்த ஜஸ்பிர் சிங் கில் 38-29 என்ற வாக்குகள் கணக்கில் அப்துல் மல்கோத்ராவை (ஜம்மு-காஷ்மீர்) தோற்கடித்து புதிய பொருளாளராகவும் தேர்வாகினர். எல்லா பதவிகளுக்கான தேர்தலிலும் ஐசரி கே.கணேஷ் அணியினை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.

புதிய தலைவரான ஐசரி கே.கணேஷ் கூறுகையில், 'இந்திய தேக்வாண்டோ சம்மேளனம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவில்லை. கடந்த 3 மாதத்துக்கு முன்பு வந்த தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் தேக்வாண்டோ சம்மேளனத்துக்கு தென்இந்தியாவில் இருந்து முதல்முறையாக நான் தலைவராக வெற்றி பெற்றுள்ளது பெருமை அளிக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் இந்திய தேக்வாண்டோ வீரர்கள் பதக்கம் வெல்லும் அளவுக்கு உயர்தர பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்