சர்வதேச பெண்கள் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை மேரி ஆன் கோம்ஸ் முன்னிலை

இந்த தொடரில் பங்கேற்றுள்ள 12 வீராங்கனைகள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகிறார்கள்.;

Update:2024-03-21 03:33 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் வேலம்மாள் கல்வி நிறுவனம் ஆதரவுடன் சர்வதேச பெண்கள் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 வீராங்கனைகள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகிறார்கள்.

3-வது நாளான நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மேரி ஆன் கோம்ஸ் 46-வது காய்நகர்த்தலில் மங்கோலியாவின் உர்ட்சாய்க்கை சாய்த்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ரிந்தியா, பிரான்சின் நினோ மைசுராட்ஸேவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தார்.

மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் பொம்மினி மவுனிகா அக்ஷயா, சக நாட்டு வீராங்கனை மோனிஷாவையும், இந்திய வீராங்கனை சாக்ஷி சிட்லாங்கே, சக வீராங்கனை மகாலட்சுமியையும் தோற்கடித்தனர். எங்துல் அல்டான் உல்சி (மங்கோலியா) - ஏஞ்சலா பிராங்கோ வேலன்சியா (கொலம்பியா), வெல்புலா சரயு (இந்தியா) - செடினா எலினா (இத்தாலி) ஆகியோர் மோதிய ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.

4-வது சுற்று முடிவில் இந்திய வீராங்கனை மேரி ஆன் கோம்ஸ் 3½ புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். வெல்புலா சரயு, சாக்ஷி சிட்லாங்கே தலா 3 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர். இன்று 5-வது மற்றும் 6-வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்