உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: காலிறுதி சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய மகளிர் அணி

சீன தைபே அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Update: 2022-10-05 16:05 GMT

Image Courtesy: PTI 

செங்குடு,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் செங்குடுவில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, தியா சித்தலே அடங்கிய இந்திய மகளிர் அணி குரூப் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது.

அந்த வகையில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன தைபை அணியை இன்று எதிர்கொண்டது. தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ராவை உலக தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள சென் சூ-யு 3-0 (11-7, 11-9, 11-3) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

பின்னர், செங் ஐ-செங் 3-1 (8-11, 11-5, 6-11, 9-11) என்ற கணக்கில் தேசிய சாம்பியனான ஸ்ரீஜா அகுலாவை வீழ்த்தினார். பின்னர் நடைபெற்ற போட்டியில் லியு ஹ்சிங் 3-2 (6-11, 11-9, 11-9, 8-11, 7-11) என்ற கணக்கில் தியா சித்தலேவை வீழ்த்தினார். இதன் மூலம் சீன தைபே அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்