'வந்தே மாதரம்' பாடிய இந்திய அணி - வீடியோவை பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்

இந்திய அணி வீரர்கள் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடிய வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.

Update: 2024-07-05 13:19 GMT

மும்பை,

9-வது டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி-20 உலகக்கோப்பையை சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

இந்த வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று இந்திய அணி வீரர்கள் மும்பையில் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் பின்னர் வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அப்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மா துஜே சலாம்'(வந்தே மாதரம்) பாடல் மைதானத்தில் ஒலிக்கவிடப்பட்டது. அந்த பாடலை மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து இந்திய அணி வீரர்களும் உற்சாகமாக பாடினர்.

இந்த நெகிழ்ச்சிகரமான வீடியோ காட்சியை பி.சி.சி.ஐ. தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் தனது 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து 'வந்தே மாதரம்' என பதிவிட்டுள்ளார். அதே போல், அந்த பாடலின் இயக்குனர் பரத்பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "27 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் உருவாக்கிய பாடல் இன்றும் தேசத்தின் உணர்வை தூண்டுகிறது என்பதை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

'மா துஜே சலாம்' பாடல் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் இடம்பெற்ற பாடலாகும். இந்த பாடலின் வரிகளை மெஹ்பூப் எழுதியுள்ளார். இந்திய சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த பாடலானது, தேசபக்தி மற்றும் தேசிய ஒற்றுமையின் அடையாளமாக மாறியுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்