உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் அணியிடம் வீழ்ந்தது இந்தியா
இந்திய அணி 3-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணியிடம் வீழ்ந்தது.
செங்டு,
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் சத்யன் ஞானசேகரன் தலைமையிலான இந்திய ஆடவர் அணி பங்கேற்றுள்ளது. இந்திய அணியின் அனுபவ வீரர் சரத் கமல் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் சத்யன், மானவ் தாக்கர், ஹர்மித் தேசாய் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி களமிறங்கியுள்ளது.
நேற்று முன்தினம் இந்திய ஆடவர் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை வீழ்த்தியது. இதை தொடர்ந்து இந்திய அணி கஜகஸ்தான் அணியை நேற்று வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பிரான்ஸ் வீரர்கள் அலெக்சிஸ் லெப்ரூன் 11-6, 11-8, 11-8 என்ற கணக்கில் மானவ் தக்கரையும், பெலிக்ஸ் லெப்ரூன் 11-4, 11-2, 11-6 என்ற கணக்கில் சத்யனையும், ஜூல்ஸ் ரோலண்ட் 11-13, 13-11, 7-11, 11-8, 11-7 என்ற கணக்கில் ஹர்மீத் தேசாயியையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வீழ்ந்தது.
இருப்பினும் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தங்கள் குரூப்-பில் 3-வது இடத்தை பிடித்து இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த சீனாவை எதிர்கொள்கிறது.