இந்த வெற்றி எனது நம்பிக்கைக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் - லக்சயா சென்
கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
கேல்கேரி,
கனடா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கேல்கேரி நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனும், உலக தரவரிசையில் 19-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீரர் லக்சயா சென், ஆல் இங்கிலாந்து சாம்பியனும், தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளவருமான சீனாவின் லி ஷி பெங்கை சந்தித்தார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இருவரும் மாறி, மாறி புள்ளிகளை எடுத்தாலும் நெருக்கடியாக தருணத்தில் நேர்த்தியாக செயல்பட்ட லக்சயா சென் 21-18, 22-20 என்ற நேர்செட்டில் லி ஷி பெங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு ரூ.26 லட்சம் பரிசாக கிடைத்தது.
உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் 500 தரவரிசை புள்ளிகள் கொண்ட போட்டியில் லக்சயா சென் வென்ற 2-வது பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு இந்திய ஓபன் போட்டியில் மகுடம் சூடியிருந்தார்.
வெற்றிக்கு பிறகு உத்தரகாண்டை சேர்ந்த 21 வயதான லக்சயா சென் கூறுகையில், 'ஒலிம்பிக் தகுதி ஆண்டில் சில விஷயங்கள் நான் நினைத்தது போல் நடக்காமல் போனது கடினமாக இருந்தது. எனவே இந்த வெற்றி எனது நம்பிக்கைக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்' என்றார். கனடா ஓபனை அடுத்து அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், சாய் பிரனீத், பி.வி.சிந்து மற்றும் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.