பார்முலா1 கார் பந்தயத்தில் வெர்ஸ்டப்பென் முதலிடம்

மொனாக்கோவில் நடந்த பார்முலா1 கார் பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்தார்.

Update: 2023-05-28 22:23 GMT

image courtesy: Oracle Red Bull Racing twitter via ANI

மொனாக்கோ,

கார் பந்தயங்களில் பிரபலமான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6-வது சுற்றான மொனாக்கோ கிராண்ட்பிரி அங்குள்ள டி மொனாக்கோ ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 260.286 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.

இதில் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியனும், நெதர்லாந்து வீரருமான மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) முதல் வரிசையில் இருந்து காரை செலுத்தினார். மின்னல் வேகத்தில் காரை ஓட்டிய அவர் மழை பாதிப்புக்கு மத்தியிலும் சூப்பராக செயல்பட்டு வாகை சூடினார். 1 மணி 48 நிமிடம் 51.980 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து அதற்குரிய 25 புள்ளிகளை தனதாக்கினார். இந்த சீசனில் வெர்ஸ்டப்பென் முதலிடத்தை பிடிப்பது இது 4-வது முறையாகும். அவரை விட 27.921 வினாடி பின்தங்கிய முன்னாள் சாம்பியன் பெர்னாண்டோ அலோன்சா (ஸ்பெயின்) 2-வதாக வந்து அதற்குரிய 18 புள்ளிகளை பெற்றார். பிரான்சின் எஸ்ட்பான் ஒகான் 3-வது இடத்தை பெற்றார்.

7 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அவருக்கு 13 புள்ளி கிடைத்தது.

இதுவரை நடந்துள்ள 6 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் வெர்ஸ்டப்பென் 144 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் (105 புள்ளி) 2-வது இடத்திலும், பெர்னாண்டோ அலோன்சா (93 புள்ளி) 3-வது இடத்திலும், ஹாமில்டன் (69 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளனர். இதன் 7-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி வருகிற 4-ந்தேதி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்