ஊக்க மருந்து சோதனையில் தோல்வி; பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு 4 ஆண்டு தடை
ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்த நிலையில், பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்திய பளு தூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு, 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த நிலையில், குஜராத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் இடையே தேசிய போட்டிகள் நடந்தன. அப்போது, செப்டம்பர் 30-ந்தேதி சஞ்சிதாவிடம் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.
இதில், துரோஸ்டானோலோன் மெட்டபோலைட் என்ற உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் தடை செய்த பட்டியலில் இடம் பெற்ற ரசாயன பொருளை சஞ்சிதா பயன்படுத்தி இருந்தது உறுதியானது.
இதனை தொடர்ந்து, அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகம் விதித்து அதற்கான உத்தரவை இன்று வெளியிட்டு உள்ளது.
சைதன்ய மகாஜன் தலைமையிலான 3 பேர் கொண்ட ஒழுங்குமுறை குழு இந்நடவடிக்கையை எடுத்து உள்ளது. இதன்படி, சஞ்சிதாவின் தற்காலிக சஸ்பெண்டு காலம் ஆரம்பித்த 2022-ம் ஆண்டு நவம்பர் 12-ல் இருந்து இந்த தடை காலம் தொடங்கும்.
இதன் தொடர்ச்சியாக தேசிய விளையாட்டு போட்டியில் சஞ்சிதா பெற்ற வெள்ளி பதக்கம் பறிக்கப்படும். எனினும், 21 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் அவருக்கு உள்ளது.