ஒடிசா சென்றடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி - 50 ஆயிரம் மாணவர்கள் வழிநெடுக நின்று உற்சாக வரவேற்பு!

மகாபலிபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது.

Update: 2022-07-15 16:15 GMT

புவனேஸ்வர்,

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டும் வரும் புகழ்மிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் நடைபெற உள்ளது இதுவே முதன்முறை. இம்முறை 189 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அதன்படி செஸ் ஒலிம்பியாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் ஜோதி ஓட்டம் ஜூன் 19-ம் தேதி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஜோதி 40 நாட்களில் நாட்டில் உள்ள 75 நகரங்களுக்கு பயணம் செய்து, இறுதியாக, போட்டி நடைபெறும் மகாபலிபுரத்தை வந்தடையும்.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்றடைந்தது. ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இந்த ஜோதியை வரவேற்று பெற்றுக் கொண்டார். பின்னர், பெண் கிராண்ட்மாஸ்டர் ஆன பத்மினி ரவுத் அவரிடமிருந்து அதனை பெற்றுக்கொண்டார்.

மேலும், கேஐஐடி மற்றும் கேஐஎஸ்எஸ் நிறுவனங்களை சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்கள் தங்கள் கல்வி நிலைய வளாகங்களுக்குச் செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று, செஸ் ஒலிம்பியாட் டார்ச் ரிலேவுக்கு கைத்தட்டலுடன் கூடிய அற்புதமான வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி லே, ஸ்ரீநகர், தர்மஷாலா, சிம்லா, சண்டிகர், அமிர்தசரஸ், குருகிராம், டேராடூன், ஹரித்வார், கான்பூர், அகமதாபாத், தண்டி, ஜெய்ப்பூர், டாமன், மும்பை, புனே, நாக்பூர், பனாஜி, போபால், இந்தூர், குவாலியர், ஜான்சி, கோஹிமா, காங்டாக், ஷில்லாங், கவுகாத்தி மற்றும் சிலிகுரி போன்ற நகரங்களைத் தழுவி இன்றுவரை வரிசையாக பல்வேறு நகரங்கள் வழியாக பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்