செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்தியா 2-வது அணிக்கு முதல் தோல்வி

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணி முதல் தோல்வியை சந்தித்தது.

Update: 2022-08-04 00:23 GMT

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் அதிக புள்ளியை குவிக்கும் அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்லும். ஓபன் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவிலும் இந்தியா தலா 3 அணிகளை களம் இறக்கியுள்ளது.

இந்த தொடரில் நேற்று 6-வது சுற்று அரங்கேறியது. ஓபன் பிரிவில் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியா 2 அணி முதல் தோல்வியை சந்தித்தது. 6-வது சுற்றில் இந்திய 2-வது அணி, முன்னாள் சாம்பியன் அர்மேனியாவை எதிர்கொண்டது. வெள்ளை நிற காய்களுடன் பிரமாதமாக ஆடிய தமிழக வீரர் 16 வயதான டி.குகேஷ் 41-வது காய் நகர்த்தலில் அர்மேனியாவின் கேப்ரியல் சர்ஜிசியனை தோற்கடித்து நம்பிக்கை அளித்தார்.

தோல்வியை சந்திக்காத அவர் இந்த தொடரில் பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். ஆனால் மற்ற இந்திய வீரர்களான அதிபன், சத்வானி ரானக் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் பின்னடைவு ஏற்பட்டது. இந்திய வீரர் சரின் நிஹல், மில்கும்யான் ஹிராந்த் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

முடிவில் இந்த ஆட்டத்தில் அர்மேனியா 2½-1½ என்ற புள்ளி கணக்கில் இந்தியா 2 அணியை வீழ்த்தியது. தொடர்ந்து 5 ஆட்டங்களில் வாகை சூடிய இந்தியா 2 அணிக்கு இது முதல் தோல்வியாகும். அடுத்தடுத்து தடுமாறியதால் இந்த ஆட்டத்தில் முன்னணி வீரர் பிரக்ஞானந்தாவுக்கு (தமிழ்நாடு) ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்ககது.

இந்தியா 1-உஸ்பெகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா தரப்பில் ஹரிகிருஷ்ணா வெற்றியும், சசிகிரண் தோல்வியும் கண்டனர். மற்ற இரு ஆட்டங்கள் டிரா ஆனது.

இந்தியா 3 அணி 3½-½ என்ற புள்ளி கணக்கில் லிதுவேனியாவை ஊதித்தள்ளியது. இந்திய அணியில் சேதுராமன், அபிஜீத் குப்தா, அபிமன்யு புரானிக் வெற்றி தேடித்தந்தனர். சூர்ய சேகர் கங்குலி-ஸ்டிமாவிசியஸ் இடையிலான ஆட்டம் 47-வது காய் நகர்த்தலில் 'டிரா'வில் முடித்து கொள்ளப்பட்டது.

பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் பலம் வாய்ந்த ஜார்ஜியாவை வீழ்த்தி 6-வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில் கோனேரு ஹம்பி, தமிழகத்தின் வைஷாலி தங்களது எதிராளிகளுக்கு 'செக்' வைத்து வெற்றியை ருசித்தனர். ஹரிகா, தானியா சச்தேவ் டிரா செய்தனர்.

இந்தியா 2-செக்குடியரசு இடையிலான 4 ஆட்டங்களும் டிராவில் முடிந்தது. இதனால் 2-2 என்ற கணக்கில் புள்ளியை பகிர்ந்து கொண்டனர். அதேசமயம் இந்தியா 3 அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்செனை உள்ளடக்கிய நார்வே அணி 1½-2½ என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதில் கார்ல்ன்சென் தனது ஆட்டத்தில் ஸ்மிர்னோவ் ஆன்டனை 40-வது காய்நகர்த்தலில் வீழ்த்தினார். ஆனால் மற்றவர்கள் கைகொடுக்காததால் அந்த அணி தோல்வியை தழுவ வேண்டியதாயிற்று.

மற்றொரு நட்சத்திர அணியான அமெரிக்கா 2½-1½ என்ற புள்ளி கணக்கில் ஈரானை வென்றது.

இதுவரை நடந்துள்ள 6 சுற்றுகள் முடிவில் ஓபன் பிரிவில் அர்மேனியா 12 புள்ளிகளுடன் தனி அணியாக முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியா 2-வது அணி உள்பட 11 அணிகள் 10 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன.

பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அஜர்பைஜான், ருமேனியா தலா 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கின்றன.

போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

Tags:    

மேலும் செய்திகள்