பிரிஜ் பூஷனை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் - மல்யுத்த வீரர்கள் வேண்டுகோள்

பிரிஜ் பூஷனை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2023-05-10 22:30 GMT

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் நேற்று 18-வது நாளாக நீடித்தது.

இந்த நிலையில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர். இது குறித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், 'இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதேபோல் புகார் கூறிய 7 வீராங்கனைகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம். அப்போது தான் யார் குற்றவாளி, யார் குற்றவாளியில்லை என்பது தெரியவரும். குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களை தூக்கில் போடுங்கள். பெண்களின் நலனுக்காக போராடும் எங்களுக்கு அனைத்து பெண்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.

'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து நாளை (இன்று) கருப்பு பட்டை அணிந்து போராட்டம் செய்ய இருக்கிறோம்' என்று ஆசிய போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனையான வினேஷ் போகத் கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் பூனியா கூறுகையில், 'மல்யுத்த போட்டிகளை நடத்துவதற்கு நாங்கள் எந்தவகையிலும் எதிர்ப்பு காட்டவில்லை. எல்லா மல்யுத்த போட்டிகளையும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்டு இருக்கும் இடைக்கால கமிட்டி நடத்த வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கையாகும். போட்டிகளை நடத்தும் விஷயத்தில் பிரிஜ் பூஷனின் தலையீடு எந்த வகையில் இருந்தாலும் அதனை நாங்கள் எதிர்ப்போம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்