உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி
உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்தியா-இத்தாலி அணிகள் மோத உள்ளன.
ஷாங்காய்,
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது. இதில் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
ஆண்கள் பிரிவில் அபிஷேக் வர்மா, பிரதமேஷ் பாலசந்திரா, பிரியான்ஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தனது முதல் இரண்டு சுற்றுகளில் பிலிப்பைன்ஸ், டென்மார்க் அணிகளை வீழ்த்தியது. அடுத்து நடந்த அரைஇறுதியில் 235-233 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. 27-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
பெண்கள் பிரிவில் அதிதி ஸ்வாமி, ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர் ஆகியோரை கொண்ட நடப்பு சாம்பியனான இந்திய அணி நேரடியாக 2-வது சுற்றில் கால் பதித்து, துருக்கியை தோற்கடித்தது. தொடர்ந்து நடந்த அரைஇறுதியில் 235-230 என்ற புள்ளி கணக்கில் எஸ்தோனியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் இந்தியா-இத்தாலி அணிகள் மோதுகின்றன.