ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த புகார்; இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை ஐஸ்வர்யாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் முன்னணி டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) வீராங்கனை ஐஸ்வர்யா பாபு. 25 வயதான ஐஸ்வர்யா கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 14.14 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்த போட்டியின் போது அவரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரியை பரிசோதித்த போது, அவர் ஆஸ்டாரின் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். பின்னர் எந்த போட்டிகளிலும் பங்கேற்க முடியாதபடி ஜூலை மாதத்தில் இருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார்.
இது குறித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தியது. கமிட்டியிடம் ஐஸ்வர்யா எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த அறிக்கையில், 'களத்தில் எனது செயல்பாட்டை அதிகரிக்க செய்வதற்காக எந்த ஊக்கமருந்தையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜிம்மில் உடற் பயிற்சி செய்கையில் எடையை தூக்கிய போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு காயத்தில் இருந்து தேறினேன். மீண்டும் தேசிய தடகள போட்டியில் கலந்து கொண்ட போது மறுபடியும் தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. இதனால் போட்டியை தவற விட வேண்டி வருமோ என்று பயந்தேன்.
அப்போது சக தடகள வீரர் ஜக்தீசிடம் இது குறித்து ஆலோசித்தேன். அவர் ஆஸ்டாரின் மாத்திரையை சாப்பிடு. வலி சரியாகி விடும். எந்த பிரச்சினையும் வராது என்று கூறினார். அதன் பின்னரே அந்த மாத்திரையை நான் சாப்பிட்டேன். வேண்டுமென்றே ஒரு போதும் ஊக்கமருந்தை உட்கொண்டதில்லை' என்று கூறியிருந்தார்.
அவரது வாதத்தை ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை. காயத்துக்கு ஏன் ஆஸ்பத்திரியையோ அல்லது அங்கீகாரம் பெற்ற டாக்டரையோ அணுகவில்லை என்று கேள்வி எழுப்பிய கமிட்டி, 'சக தடகள வீரரின் ஆலோசனையை கேட்டு விதிமுறையை பின்பற்றுவதில் முழுமையாக அலட்சியம் காட்டியிருக்கிறார். உண்மைத் தன்மை மற்றும் சூழ்நிலையை விரிவாக ஆராய்ந்ததன் அடிப்படையில் ஐஸ்வர்யாவுக்கு 4 ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடை காலம் 2022-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதியில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஊக்கமருந்து சோதனைக்கு பிறகு அவர் வென்ற பதக்கங்கள் பறிக்கப்பட்டு, அவரது போட்டியின் முடிவுகள் தகுதி நீக்கம் செய்யப்படும்' என்று கூறியிருக்கிறது. தடையை எதிர்த்து அவர் வருகிற 6-ந்தேதிக்குள் அப்பீல் செய்யலாம்.