9 அணிகள் பங்கேற்கும் வாலிபால் லீக் போட்டி - சென்னையில் 15-ந் தேதி தொடக்கம்
3-வது பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் மார்ச் 21-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை,
3-வது பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதி முதல் மார்ச் 21-ந் தேதி வரை நடக்கிறது. ஐ.பி.எல். பாணியில் உள்நாட்டு வீரர்களுடன், வெளிநாட்டினரும் இணைந்து களம் காணும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆமதாபாத் டிபென்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ், மும்பை மீட்டியார்ஸ், புதிதாக இணைந்துள்ள டெல்லி டூபான்ஸ் ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன.
தொடக்க லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் டாப்-5 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர்5' சுற்றுக்கு முன்னேறும். 'சூப்பர் 5' சுற்றில் மீண்டும் எல்லா அணிகளும், மற்ற அணிகளை தலா ஒரு முறை சந்திக்கும். இதன் முடிவில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டும்.