புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் முடித்தது
12 அணிகள் இடையிலான புரோ கபடி லீக் தொடரில், லீக் சுற்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
புனே,
நேற்றிரவு புனேயில் நடந்த 124–வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான தமிழ் தலைவாஸ்–நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணியை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே முன்னிலை வகித்த தமிழ் தலைவாஸ் அணி முதல் பாதியில் 29–12 என்ற புள்ளி கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. கடைசி கட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணிக்கு கடும் நெருக்கடி அளித்தது. அதனை நிதானமாக சமாளித்த தமிழ் தலைவாஸ் அணி 40–37 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி 6–வது வெற்றியை ருசித்து தனது லீக் பயணத்தை வெற்றியுடன் முடித்தது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட தமிழ் தலைவாஸ் அணி தனது 22 லீக் ஆட்டங்கள் முடிவில் 6 வெற்றி, 14 தோல்வி, 2 டிராவுடன் 46 புள்ளிகள் பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்–உத்தரபிரதேச யோத்தா (இரவு 8 மணி), புனேரி பால்டன்–தபாங் டெல்லி (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.