உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்

விஜயவாடாவை சேர்ந்த 26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

Update: 2023-04-22 19:45 GMT

அண்டால்யா,

உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 1) போட்டி துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம்-ஒஜாஸ் தியோதால் இணை 159-154 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் சென் யி ஹூன்-சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

உலகக் கோப்பை காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு பாரீசில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், அபிஷேக் வர்மாவுடன் இணைந்து இதே பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் 149-146 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சாரா லோபெஸ்சை (கொலம்பியா) வீழ்த்தி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

அத்துடன் 2021-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சாராலோபெஸ்சிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார். விஜயவாடாவை சேர்ந்த 26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

 

Tags:    

மேலும் செய்திகள்