பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து; நடப்பு சாம்பியன் அமெரிக்கா வெளியேற்றம்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான அமெரிக்கா பெனால்டி ஷூட்-அவுட்டில் சுவீடனிடம் வீழ்ந்தது.

Update: 2023-08-07 04:46 GMT

மெல்போர்ன்,

பெண்கள் கால்பந்து

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிந்து தற்போது 2-வது சுற்று (ரவுண்ட் 16) ஆட்டங்கள் நடக்கின்றன.

மெல்போர்னில் நேற்றிரவு நடந்த ஆட்டம் ஒன்றில் 4 முறை சாம்பியனும், உலகின் 'நம்பர் ஒன்' அணியுமான அமெரிக்காவும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சுவீடனும் பலப்பரீட்சை நடத்தின. பலம் வாய்ந்த அமெரிக்காவின் சவாலுக்கு சுவீடன் வீராங்கனைகள் எல்லா வகையிலும் ஈடுகொடுத்து ஆடியதால், அமெரிக்க வீராங்கனைகளால் எதிராளியின் தடுப்பு அரணை கடைசி வரை உடைக்க முடியவில்லை. அலெக்ஸ் மோர்கன், லின்சே ஹோரன் அடித்த பிரமாதமான ஷாட்டுகளை சுவீடன் கோல் கீப்பர் ஜெசிரா முசோவிச் சூப்பராக முறியடித்தார்.

வழக்கமான 90 நிமிடங்களில் இரு அணியினரும் கோல் ஏதும் போடவில்லை. இதையடுத்து கூடுதல் நேரமாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. அதிலும் கோல் விழவில்லை. பந்தை அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் (58 சதவீதம்) வைத்திருந்த அமெரிக்க வீராங்கனைகள் இலக்கை நோக்கி 11 ஷாட்டுகள் உதைத்தும் ஒன்றை கூட கோலாக மாற்ற முடியவில்லை. எல்லா பெருமையும் சுவீடன் கோல் கீப்பர் முசோவிச்சையே சாரும். தூண்போல் நின்று தற்காத்த அவர் தன்னைநோக்கி வந்த பந்துகளை எல்லாம் தடுத்து நிறுத்தி அசத்தினார்.

அமெரிக்கா வெளியேற்றம்

இதையடுத்து வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இவற்றில் இரு அணியினரும் 3-ஐ மட்டும் கோலாக்கியதால் ஆட்டம் சடன்டெத் முறைக்கு நகர்ந்தது. சடன்டெத்தில் முதலாவது வாய்ப்பை இரு அணியினரும் கோலாக்கினர். 2-வது வாய்ப்பில் அமெரிக்காவின் கெலி ஓ ஹரா அடித்த பந்து கம்பத்தில் பட்டு நழுவியது. அடுத்து சுவீடனுக்குரிய வாய்ப்பில் லினா ஹர்ட்டிங் உதைத்த பந்தை அமெரிக்க கோல் கீப்பர் அலிசா நகெர் பாய்ந்து விழுந்து தடுத்தார். அவரது கையில் பட்டு மேலே எழும்பிய பந்தை மீண்டும் வெளியே தள்ள முயற்சித்தார். ஆனால் அதற்குள் பந்து கோல் லைனை தொட்டதால் அது கோல் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க வீராங்கனைகள் ஒரு கனம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் சுவீடன் 5-4 என்ற கணக்கில் அமெரிக்காவை விரட்டியடித்து 7-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தது.

நடப்பு சாம்பியனான அமெரிக்கா, பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் எந்த பதக்கமும் இன்றி வெறுங்கையுடன் தாயகம் திரும்புவது இதுவே முதல் முறையாகும். முந்தைய 8 உலகக் கோப்பை போட்டிகளில் 4 முறை சாம்பியன், ஒரு தடவை வெள்ளிப்பதக்கம், மூன்று முறை 3-வது இடத்தை பிடித்து வெண்கலம் வென்று இருந்தது. தற்போது தான் முதல் முறையாக அரைஇறுதிக்கு முன்பாக வீழ்த்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் கடைசி லீக்கிலும் அமெரிக்கா கோல் அடிக்கவில்லை. உலகக் கோப்பையில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் அமெரிக்கா கோல் போடாததும் இதுவே முதல் நிகழ்வாகும்.

நெதர்லாந்து வெற்றி

முன்னதாக சிட்னியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை பதம் பார்த்து கால்இறுதியை எட்டியது. நெதர்லாந்து அணியில் ஜில் ரூர்டு 9-வது நிமிடத்திலும், லினெத் பீரன்ஸ்டெயின் 68-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். நெதர்லாந்து கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதுகிறது. சுவீடன் அணி ஜப்பானை சந்திக்கிறது.

இன்றைய 2-வது சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து-நைஜீரியா, ஆஸ்திரேலியா- டென்மார்க் அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்