பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்ற ஸ்வீடன்
ஆட்ட நேர முடிவில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது.
பிரிஸ்பேன்,
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - ஸ்வீடன் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ப்ரிடோலினா ரோல் போ முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனை தொடர்ந்து 2-வது பாதி ஆட்டத்தில் 62-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை கொசோவரே அஸ்லானி ஒரு கோலை பதிவு செய்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் ஸ்வீடன் முன்னிலையில் இருந்தது. கடைசி வரை பதில் கோல் அடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திணறினர்.
இதன்மூலம் ஆட்ட நேர முடிவில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. ஸ்வீடன் அணி 4-வது முறையாக வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.