வீராங்கனைகளை தாக்கிய விவகாரம்: இந்திய கால்பந்து சம்மேளன செயற்குழு உறுப்பினர் சஸ்பெண்ட்

தீபக் ஷர்மாவை சஸ்பெண்ட் செய்து அகில இந்திய கால்பந்து சம்மேளன செயற்குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2024-04-02 22:24 GMT

புதுடெல்லி,

கோவாவில் நடந்த இந்திய பெண்கள் கால்பந்து லீக்கின் 2-வது டிவிசன் போட்டியில் இமாசலபிரதேசத்தை சேர்ந்த காத் எப்.சி. அணிக்காக விளையாடிய 2 வீராங்கனைகளை, அந்த கிளப்பின் உரிமையாளரும், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினருமான தீபக் ஷர்மா கடந்த வாரம் இரவு ஓட்டல் அறையில் அத்துமீறி நுழைந்து தாக்கினார்.

இந்த சம்பவம் குறித்து போட்டியை நடத்திய கோவா கால்பந்து சங்கம் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட தீபக் ஷர்மா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது குறித்து விசாரிக்க 3 பேர் கமிட்டியை அமைத்து இருந்த அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டது.

இந்த நிலையில் தீபக் ஷர்மாவை அகில இந்திய கால்பந்து சம்மேளன செயற்குழு சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை அவர் கால்பந்து சம்பந்தமான எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாது. அத்துடன் முன்பு அமைக்கப்பட்ட 3 பேர் விசாரணை கமிட்டி கலைக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு இந்த பிரச்சினை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்