தெற்காசிய பெண்கள் கால்பந்து: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
6-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி நேற்று நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் மாலத்தீவை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை ஊதித்தள்ளி தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்ததுடன், அரைஇறுதியையும் உறுதி செய்தது. முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்று இருந்தது. இந்திய அணி தரப்பில் அஞ்சு தமாங் 4 கோல்கள் அடித்தார். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வருகிற 13-ந் தேதி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.