லெபனானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

லெபனானை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ஒடிசா முதல்-மந்திரி ரூ.1 கோடி பரிசு அறிவித்து உள்ளார்.

Update: 2023-06-19 04:57 GMT

புவனேஸ்வர்,

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் சர்வதேச நாடுகள் கலந்து கொண்ட இன்டர்கான்டினென்டல் கோப்பை 2023-க்கான போட்டிகள் நடந்தன.

இதில், இறுதி போட்டிக்கு முன்னேறிய லெபனான் மற்றும் இந்திய அணிகள் விளையாடின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி அதிரடியாக விளையாடியது.

இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் லல்லியான்ஜுவாலா சாங்தே ஆகியோர் அடித்த தலா ஒரு கோலால் இந்திய அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், சாம்பியன்ஸ் கோப்பையை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார். இதுபற்றி ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட முதல்-மந்திரி நவீன் பட்நாயக், இந்த கவுரவமிக்க இன்டர்கான்டினென்டல் கோப்பைக்கான போட்டியை நடத்தியது ஒடிசாவுக்கு பெரிய பெருமை அளிக்க கூடிய விசயம்.

ஒடிசாவில் பல கால்பந்து போட்டிகளை நடத்தும் நோக்கம் அரசுக்கு உள்ளது என கூறிய அவர், ஒடிசா மற்றும் இந்தியாவில் விளையாட்டுக்கான வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்போம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார் என தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்