ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - குரோஷியா கேப்டன் மோட்ரிச் பேட்டி

சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று குரோஷியா கேப்டன் மோட்ரிச் கூறியுள்ளார்.

Update: 2022-12-19 00:07 GMT

image courtesy: FIFA World Cup twitter via ANI

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரைஇறுதியில் அர்ஜென்டினாவிடம் தோல்வியை தழுவிய குரோஷியா அடுத்து நேற்று முன்தினம் நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மொராக்கோவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை பெற்றது.

குரோஷிய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், கேப்டனுமான லூகா மோட்ரிச் இந்த ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதைக்கு ஓய்வு இல்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். 37 வயதான மோட்ரிச் இதுவரை 162 ஆட்டங்களில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார். ரியல் மாட்ரிட் கிளப்புக்காகவும் ஆடுகிறார்.

கத்தார் உலகக்கோப்பையில் மொத்தம் 656 நிமிடங்கள் விளையாடி தங்கள் அணி அரைஇறுதிவரை முன்னேற உறுதுணையாக நின்ற மோட்ரிச் நிருபர்களிடம் கூறுகையில், 'தேசிய அணிக்காக உற்சாகமாக ஆடுகிறேன். இன்னும் என்னால் அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க முடியும். குறைந்தது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கும் நேஷன்ஸ் லீக் இறுதிசுற்று வரை தொடர்ந்து சர்வதேச போட்டியில் விளையாட விரும்புகிறேன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

இது எனது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம். ஆனால் இப்போது என்னால் எதையும் உறுதியாக சொல்ல முடியாது. 2024-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெறும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் விளையாடுவேனா என்பதும் தெரியாது.

குரோஷிய அணி உடனான எனது பயணம் மகிழ்ச்சிகரமானது. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு. அது நடக்காவிட்டாலும், தொடர்ந்து இரு உலகக் கோப்பை போட்டிகளில் பதக்கம் கைப்பற்றியது (2018-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கம்) மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பதக்கத்துடன் கத்தாரை விட்டு கிளம்புகிறோம்' என்றார்.

குரோஷியா பயிற்சியாளர் லாக்டோ டாலிச் கூறும் போது, 'மோட்ரிச் எங்களது தலைவர். இந்த தொடரில் அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. வயது தான் 37. ஆனால் ஒரு 20 வயது வீரர் போன்று அவர் ஆடினார். சிலர் அவரது சர்வதேச விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் நான், அவர் அணியினருடன் நீண்ட காலம் இருப்பார் என்று நினைக்கிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்