ஐ.எஸ்.எல். கால்பந்து கொச்சியில் இன்று தொடக்கம் - முதலாவது ஆட்டத்தில் கேரளா-பெங்கால் மோதல்
கொச்சியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணிகள் மோதுகின்றன.
கொச்சி,
இந்த ஆண்டுக்கான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், கவுகாத்தி, சென்னை, மும்பை, ஐதராபாத், புவனேஷ்வர், கோவா ஆகிய நகரங்களிலும் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் எப்.சி., 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான், 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், ஈஸ்ட் பெங்கால்,, பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட்., மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர் எப்.சி., ஒடிசா எப்.சி., எப்.சி.கோவா ஆகிய 11 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழையும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த போட்டி நடக்கிறது.
கொச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணிகள் மோதுகின்றன. அனிருத் தபா தலைமையிலான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 10-ந் தேதி ஏ.டி.கே. மோகன் பகானை கொல்கத்தாவில் சந்திக்கிறது. அதே சமயம் சென்னை அணி தனது முதலாவது உள்ளூர் ஆட்டத்தில் வருகிற 14-ந் தேதி பெங்களூரு எப்.சி.யை சென்னை நேரு ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.
கடந்த 2 சீசன்களாக ஐ.எஸ்.எல். போட்டி கோவாவில் ரசிகர்கள் இன்றி நடந்தது. இந்த சீசனில் ஆட்டத்தை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் போட்டி மேலும் விறுவிறுப்பாக இருக்கும் எனலாம். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.